இபிஎஸ்-க்கு வந்திருப்பது பொறாமை நோய் - ஆர்.எஸ்.பாரதி
75 நாட்கள் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை கூட வெளியிடாதவர்கள், முதல்வரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவரை, அமைச்சர்களோடு நெருக்கமாக இருந்தாலேயே பள்ளியில் பேச அனுமதித்திருக்கிறார்கள்” எனக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார். முதல்வராக இருந்த நீங்கள் ஒரு விஐபிதானே? ஒரு விஐபி-யைத் தேடி நிறையப் பேர் பார்க்க வருவார்கள் என்பது அடிப்படை தியரி. அப்படிப் பார்க்க வருகிறவர்கள் ஒவ்வொருவரின் பின்புலத்தை அலசிப் பார்த்துவிட்டா அனுமதி அளிப்பார்கள்? இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படி முதல்வராகப் பொறுப்பு வகித்தீர்கள்? எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்? பழனிசாமிக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தனது ஆட்சியில் தமிழகத்தை அனைத்து துறையிலும் தரை மட்டத்துக்கு இறக்கி பாழ்படுத்திய பழனிசாமிக்கு யாரையும் குறை சொல்லும் தகுதியோ அருகதையோ கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.