கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு மேலும் இரு இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திறனை தமிழ்நாடு இழந்து வருவது உறுதியாகியிருக்கிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மராட்டிய மாநிலம் மொத்தம் ரூ. 70, 795 கோடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. கர்நாடகம், டெல்லி, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிக முதலீட்டை ஈர்த்திருக்கின்றன. முதலிடம் பிடித்துள்ள மராட்டியம் ஈர்த்துள்ள முதலீட்டில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது என்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிவதாக மாயத் தோற்றம் ஏற்படுத்துவதை விடுத்து, உண்மையாகவே மராட்டியம், குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.