ரூ. 400 கோடி மதிப்பீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.
30.8.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 31. 8. 2024 அன்று சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.