தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பாக சட்ட நிபுணர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே கடந்த மாதம் கட்சிக் கொடி மற்றும் பாடலையும் அறிமுகம் செய்தார். அந்த நிகழ்விலேயே விரைவில் மாநாடு நடைபெறும் எனவும் விஜய் அறிவித்தார். இதற்காக பல்வேறு பகுதிகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆய்வு மேற்கொண்ட நிலையில் விக்கிரவாண்டியில் வரும் 23-ம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தரப்பில் 21 கேள்விகளுக்கு விடையளிக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கேள்விக்கான பதிலை தயாரித்துள்ளனர். இந்த பதில்கள் அடங்கிய பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கும் பொருட்டு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விஜய் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, அவர் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சட்டநிபுணர்களுடனும் கலந்தாலோசித்து, பதில்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.