திருவொற்றியூர் பகுதியில் 2, 099 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி, “உங்களுக்கும் உங்களின் அடுத்த தலைமுறைக்கும் உழைக்கத் தயாராக உள்ளோம், ” என்று தெரிவித்தார்.
சென்னை திருவொற்றியூர், வெள்ளையன் செட்டியார் மேல் நிலைப் பள்ளியில், திருவொற்றியூர் தொகுதியில் நீண்டகாலமாக பல்வேறு காரணங்களால் வழங்கப்படாமல் இருந்த வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று 2, 099 பேருக்கு பட்டாக்களை வழங்கினார்.
பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஏழை எளிய அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கும் அரசாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, வீடு என்பது சிலருக்கு கனவு. அதை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டி ஒதுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தற்போது, 28, 848 பேருக்கு பட்டா தயாராக உள்ளது. இதில் திருவொற்றியூர் பகுதிக்கான 7 ஆயிரம் பட்டாக்களில் 2, 099 பட்டாக்கள் இன்று வழங்கப்படுகிறது. மீதமுள்ள பட்டாக்கள் அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் வழங்கப்படும். உங்களுக்கும் உங்கள் அடுத்த தலைமுறைக்கும் உழைக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார்.