சென்னை: அனுமதி மறுக்க ஆளுநருக்கு தார்மீக உரிமை இல்லை: உயர்நீதிமன்றம்
ஆயுள் கைதியை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், அவரது மனுவை அரசு மீண்டும் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டையை சேர்ந்த வீரபாரதி என்பவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவில், என்னுடன் இதே குற்றத்துக்காக கைதான சக ஆயுள் தண்டனை கைதி முன்கூட்டியே விடுதலை செய்யப் பட்ட நிலையில், என்னை மட்டும் இதுவரை விடுதலை செய்யவில்லை. இதுதொடர்பான கோப்புகளுக்கு முதல்வர் தலைமையிலான அமைச்சரவை அனுமதி அளித்து, ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், கொடுங்குற்றச்செயல் என்று கூறி, ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்துவிட்டார். எனவே, என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், வி. சிவஞானம் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான். அதை ஆளுநரால் மீறமுடியாது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை எதுவும் இல்லை. எனவே, மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் மனுவை அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுவரை மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.