சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரூ. 38, 698. 80 கோடி முதலீட்டுக்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 46, 931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ராணிப்பேட்டையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (ரூ. 9000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 5000 நபர்கள்), காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசாண் டெக்னாலஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (ரூ. 13180 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 14, 000 நபர்கள்), தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவண்ணாமலையில் PSG குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (ரூ. 10375 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 3000 நபர்கள்), அரியலூரில் தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃப்ரீடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ. 1000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 15, 000 நபர்கள்), காஞ்சிபுரத்தில் கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ. 1395 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1033 நபர்கள்), ஓசூரில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ. 612. 60 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1200 நபர்கள்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.