2023-2024 அரவைப் பருவத்துக்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு 2023-24 ஆம் அரவைப்பருவத்துக்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ. 2919. 75/-யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ. 215 வழங்கிடும் வகையில், ரூ. 247 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து அரசு வழங்கி ஆணையிட்டுள்ளது.
சிறப்பு ஊக்கத்தொகையுடன் சேர்த்து டன்னுக்கு ரூ. 3134. 75: அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, தமிழகத்தில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ. 2919. 75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 215 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ. 3134. 75 விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ. 247 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத் தொகையினால் சுமார் 1. 20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.