சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை - ஜி. கே. வாசன்
கனமழைக்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் எம். பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலோரப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பு தெரிவிக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழையோ கனமழையோ பெய்ய வாய்ப்புண்டு. மழைக்காலங்களில் பெய்யும் மழையால் பல இடங்களில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கியிருப்பதும், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதும், மழைநீரோடு கலந்து வந்து கழிவுநீர் குடிநீரில் கலப்பதும், சாலைகள் பழுதடைவதும், போக்குவரத்து தடைபடுவதும், மக்களின் இயல்பு வாழ்க்கை சிரமத்திற்கு உட்படுவதும் வழக்கமானது. எனவே தமிழக அரசு, மழைக்காலத்தில் சென்னை உள்பட மாநிலத்தில் எங்கு மழை பெய்தாலும் மக்களை, விவசாயத்தை, கால்நடைகளை பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.