
விழுப்புரம்: மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை பராமரிக்கும் பள்ளி, கல்லுாரி, வணிக நிறுவனங்களுக்கு பரிசு வழங்கப்படும் என, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 'மீண்டும் மஞ்சப்பை' பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்கள் பள்ளி வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாமல் பராமரிக்கும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லுாரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. முதல் பரிசு 10 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு 5 லட்சும் ரூபாய் வழங்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம், தடையை அமல்படுத்தவும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றவும், முன்மாதிரியாக பங்களிப்பை செய்த பள்ளி, கல்லுாரி, வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் கலெக்டர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனி நபர், அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், 2 அச்சுப் பிரதிகள், கலெக்டர் அலுவலகத்தில் வரும் மே 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.