
மரக்காணம் அருகே வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம்
மரக்காணம் அடுத்த கந்தாடு தனியார் பள்ளி அருகே உள்ள ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மரக்காணம் போலீசார் நிகழ்விடம் சென்று கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் முள்புதருக்குள் இறந்து கிடந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். சடலத்தை கைப்பற்றி புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த வெள்ளகொண்டாகரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயசீலன் (41) என்பதும், பெயிண்டராக இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியே சென்றவர் அதன்பின் வீடு திரும்பாத நிலையில், அவர் கொலையாகி கிடந்தது தெரியவந்தது. கோட்டக்குப்பம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் உமாதேவி சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ஜெயசீலன் நிகழ்விடத்திலேயே கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு பின்னர் கந்தாடு பகுதி உள்முள்புதரில் வீசப்பட்டாரா என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் மரக்காணம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜெயசீலனுக்கு வெண்ணிலா(35) என்ற மனைவியும், ஹரிஹரன்(14), ஜான்சன் (11) ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.