
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஆராதனை நிறைவு
திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு 2 நாள் ஆராதனை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய தினம் காலை ஹோமங்கள், விசேஷ பூஜைகள், நான்கு வேத பாராயண நிகழ்ச்சிகள், புதிய புத்தகங்கள் வெளியீடு, பக்தா்கள் பஜனை, மயிலை பா. சற்குருநாத ஓதுவாா் குழுவினரின் தேவார இன்னிசை, பூஜ்ய ஸ்ரீரமணசரண தீா்த்த சுவாமிகளின் பகவத் கீதை சாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் 2-ஆவது நாளான நேற்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சிறப்பு ஹோமங்கள், மகா அபிஷேகம், விசேஷ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, மாலை 4. 30 மணி முதல் 5. 30 மணி வரை விஷ்ருதி கிரிஷ் மற்றும் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும், மாலை 6. 30 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜ்ய ரமண சரண தீா்த்த சுவாமிகளின் பகவத் கீதை சாரம் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பகவானின் உற்சவ மூா்த்தியுடன் கூடிய வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. இத்துடன் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா நிறைவு பெற்றது. காலை 7 மணி முதல் இரவு வரை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மதா் மா தேவகி, மதா் விஜயலட்சுமி, மதா் ஜி. ராஜேஸ்வரி, ஜி. சுவாமிநாதன், பி. ஏ. ஜி. குமரன், சி. சுரேஷ் மற்றும் தன்னாா்வலா்கள், ஆஸ்ரம ஊழியா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.