திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக திகழ்ந்து வருகிறது. அக்னி தலமாக இருப்பதால் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் எப்போதும் மிக விமர்சையாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவின் போது பல லட்சக்கணக்கான மக்கள் தீபத் திருவிழாவை பார்க்க குவிவது வழக்கம்.
இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் அதற்காக 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த டிசம்பர் நான்காம் தேதி கொடியேற்றத்துடன் மிக விமர்சையாக திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு ஆகிய வேளைகளில், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
விழாவின் ஏழாம் நாளான இன்று (டிசம்பர் 10) பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 7 மணியளவில் விநாயகர் தேரோட்டம் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரருக்கு 'அரோகரா' உண்ணாமலையம்மனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
விநாயகர் தேருக்கு பிறகு முருகர் தேர் வலம் வந்தது. அதைத்தொடர்ந்து மகா ரதம் என்றழைக்கப்படும் அருணாச்சலேஸ்வரர் தேரானது மாட வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதனை லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.