திருச்சி கலெக்டர் அலுவலக ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நில எடுப்பு பிரிவு சர்வே உதவியாளராக பணியாற்றி வருபவர் 53 வயதான கலையரசன். திருச்சி திருவானைக்காவல் கொண்டயம்பேட்டை கொள்ளிடக் கரையில் உள்ள தனது வயலில் நெல் சாகுபடி செய்துள்ளார் கலையரசன். இதே பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவரது ஆடு, இவரது வயலில் அடிக்கடி புகுந்து நாசம் செய்தது. இதை தடுக்கவேண்டிய கலையரசனை, அந்த ரவுடி செங்கல்லால் அவரது முகத்திலும், கட்டையால் அவரது உடலிலும் கடுமையான முறையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கலையரசன், கடந்த 4-ம் தேதி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கலையரசன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது தற்போது வரை ஸ்ரீரங்கம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் இன்று, ரவுடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அரசாங்க ஊழியர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போதும் அவர் அளித்த புகார் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் எடுக்கவில்லை என்றால் சாதாரண மனிதனின் நிலை என்ன? இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.