தூத்துக்குடி: அரசு பள்ளிக்கு பூட்டுப்போட்டதால் மாணவர்கள் அவதி
மாவடிபண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியின் நுழைவு வாயில் கேட்டிற்கு மர்ம நபர் பூட்டு போட்டதால் மாணவர்கள் நீண்ட நேரம் வெளியே காத்திருந்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே மாவடிபண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் (அக்.,17) பள்ளி நேரம் முடிந்ததும் நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சத்துணவு முட்டைகள் வந்ததால், அவற்றை இறக்கிவைக்க பணியாளர் வந்தார். அப்போது, நுழைவு வாயில் கேட்டில் பள்ளி சார்பில் போடப்பட்டிருந்த பூட்டுக்கு மேல் மற்றொரு பூட்டு போடப்பட்டிருந்தது. மாணவர்கள் வெளியில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது ஆலோசனைப்படி, ஆசிரியர்களும் அந்த பகுதி மக்களும் சேர்ந்து பூட்டை உடைத்தனர். இதையடுத்து, மாணவ மாணவிகள் உள்ளே சென்றனர். இத்தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி போலீசார் வந்து விசாரித்தனர். அதில், அப்பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளங்கோ என்பவர் நுழைவு வாயிலை பூட்டிச் சென்றது தெரியவந்தாக போலீசார் கூறினர்.