சென்னை வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் குமரி கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடற்கரை பகுதிகளில் ஆழ் கடலில் சுழற் காற்றானது 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீச கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிப்பில் இருக்கும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று திரேஷ்புரம், இனிகோ நகர் , புதிய துறைமுக கடற்கரை, வேம்பார், தருவைகுளம், பெரியதாழை, மணப்பாடு ஆகிய பகுதிகளில் இருந்து கடலுக்கு செல்லும் நாட்டுப் படகுகள் குறைவான அளவில் சென்றுள்ளன மற்ற படகுகள் அனைத்தும் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.