தூத்துக்குடி வ. உ. சி. துறைமுகத்தில் சர்வதேச சரக்குபெட்டக முனையத்தை மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால், சாந்தனு தாக்கூர் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி சர்வதேச சரக்குபெட்டக முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் வ. உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் பல்வேறு திட்டங்களின் தொடக்கம், அடிக்கல் நாட்டுதல், பணிகளைத் தொடங்குதல் மற்றும் நில ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் ஆகிய திட்டங்கள் தொடக்க விழா இன்று வ. உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், சரக்குத்தளம் 9இல் நடைபெற்றது.
இதில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஆகியோர் கொடி அசைத்து திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி வ. உ. சி. துறைமுக ஆணையம் தலைவர் சுசந்த குமார் புரோஹித், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிகள் துறை அமைச்சக செயலாளர் தா. கி. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா. ஐஸ்வா்யா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.