திருவாரூர்: கோவில்பத்து மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேக விழா
அலிவலம் மாணிக்கவாசகர் ஆலய குடமுழுக்கு விழா. திரளான பொதுமக்கள் சாமி தரிசனம். திருவாரூர் மாவட்டம் அலிவலம் அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான மாணிக்கவாசகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் இந்த கோவில் குடமுழுக்கை ஒட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் புனரமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று சிவபூஜை வழிபாடு செய்யப்பட்டு யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து முதற்கால வேள்வி யாகசாலை பூஜை தொடங்கி மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்து மாணிக்கவாசகர் சிலைக்கு புனித நீரை ஊற்றி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவைக் காண்பதற்காக கோவில்பத்து கிராம மக்கள் மட்டுமல்லாது திருவாரூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.