திருவள்ளூர்: நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய நண்பர்
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர், தனது நிர்வாண வீடியோவை வைத்துக்கொண்டு நண்பர் மிரட்டுவதாக நேற்று (நவ. 08) இரவு புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், இளம்பெண் மும்பையில் எம்எஸ்சி கெமிஸ்ட்ரி படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் வளசரவாக்கத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞர் பழக்கமாகியுள்ளார். மேலும், அவ்வப்போது அந்த இளைஞருடன் வீடியோ காலில் பேசி வந்ததாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இளைஞர் பெண்ணை அடிக்கடி நிர்வாணமாக வீடியோ காலில் வருமாறு கூறியுள்ளார். அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால், தன்னை காயப்படுத்திக் கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், இளம்பெண் இரண்டு முறை நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதாக கூறியுள்ளார். இதன் பின்னர் அந்த வீடியோவை வைத்துக்கொண்டு இளம் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு இளம்பெண்ணை மிரட்டி சுமார் 5 லட்சம் ரூபாயை இதுவரையில் இளைஞர் பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில், தனது வீடியோவை வைத்துக்கொண்டு மேலும் 50 ஆயிரம் கேட்பதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று மிரட்டுவதாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.