திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது ஆரணி ஆற்று படுகை அருகிலுள்ள காட்டூர் விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் நெற்பயிர் காப்பீடு செய்து இருந்தனர். அதே ஆண்டு மிக்ஸாம் புயலால் ஆரணி ஆற்றின் கரை உடைந்து இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்தநெற் பயிர்கள் சேதம் அடைந்தன. புயலுக்குப் பின் மத்திய குழுவுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரும் நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். பின்னர் ஏக்கருக்கு ₹15000 நிவாரண தொகையாக வழங்கப்படும் என தெரிவித்து இருந்த நிலையில் ஒரு பகுதியாக காட்டூர்-2 பகுதிக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்த 500கும் மேற்பட்ட விவசாயிகள் இதுகுறித்து பலமுறை பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாமில் தெரிவித்துள்ளனர். வேளாண் துறையில் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இத்தொகைக்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் இன்று மீஞ்சூர்- காட்டூர் நெடுஞ்சாலையில் விவசாயிகள் நிவாரணம் கேட்டு கைகளில் பதாகைகளை ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.