தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தில் விஷமருந்து தெளித்து நெல்பயிரை பட்டுப்போகச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு பகுதியை சேர்ந்தவர் மகாராஜா, இவர் செருவாவிடுதி வடக்கு பகுதியை சேர்ந்த எம்ஜிஆர் என்பவரிடம் விலைக்கு வாங்கிய நிலத்தில் சுமார் 70 செண்ட் நெல் பயிரிட்டிருந்தார். நிலம் வாங்கியதிலிருந்து எம்ஜிஆரின் சகோதரி மலர் என்பவர் மகாராஜாவிடம் அடிக்கடி பிரச்சனை செய்து வந்தாராம்.
இந்நிலையில், விவசாய வேலைகளுக்காக ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்து, தற்போது நெல் கதிர்விட்டுள்ள நிலையில் மலர் மற்றும் அவரது மகன் போத்திராஜா, உறவினர் ரவி ஆகியோர் கதிர்விட்டுள்ள நெல்பயிரில் விஷமருந்து தெளித்து பயிர்களை பட்டுப் போக செய்துவிட்டதாகவும், இதனால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதால், பயிரை பாழ்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி மகாராஜா திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.