பேராவூரணியில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

85பார்த்தது
பேராவூரணியில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
பேராவூரணியில், தஞ்சாவூர் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களைச் சேர்ந்த 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாம்பூலத் தட்டில் மங்கலப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினர் என். அசோக் குமார் வழங்கி அட்சதை தூவி வாழ்த்தினார். தொடர்ந்து, கர்ப்பிணிகள் 250 பேர், அவர்களது உறவினர்கள் 750-க்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், புளியோதரை, தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி என 5 வகையான சாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன் (சேதுபாவாசத்திரம்), சாமிநாதன் (பேராவூரணி), பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம், திமுக நிர்வாகிகள் சுப. சேகர், மு. கி. முத்துமாணிக்கம், கோ. இளங்கோ, அ. அப்துல் மஜீத், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பிலோமினா சாந்தினி, கண்காணிப்பாளர்கள் ரமேஷ் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்றார். நிறைவாக குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அனுசியா நன்றி கூறினார். கர்ப்பிணிகளுக்கான சத்துணவு தொடர்பான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.