கும்பகோணம்: நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள நடுவக்கரையில் இருந்து மாங்குடி, குடமங்கலம், இளந்துறை, திருமலைராஜபுரம், மல்லபுரம், வடமட்டம் வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கீர்த்திமான் ஆறு கரை பகுதிகளில் சுமார் நூறாண்டுகளுக்கு மேலாக 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகிறனர். இந்நிலையில் கீர்த்திமான் ஆற்றங்கரையோரம் இருபுறமும் உள்ள வீடுகளை 21 நாட்களில் காலி செய்ய வேண்டும் என நீர்வளத் துறை சார்பாக அனைத்து வீடுகளுக்கும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும் 21 நாட்களில் வீட்டை காலி செய்யாத பட்சத்தில் நாங்களே ஆக்கிரமிப்பு பகுதிகளை அப்புறப்படுத்துவோம் என எச்சரித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் நோட்டீஸ் வழங்கிய நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும் காலம் காலமாக குடியிருந்து வரும் வீடுகளை அதிகாரிகள் அகற்றக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரும் தீபாவளி பண்டிகையை கிராம மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.