தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பில் மஸ்ஜித் நூர் பள்ளிவாசலில் வைத்து நேற்று (பிப்.1) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ள வருகை தந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது. 50 சதவீதத்திற்கு அதிகமாக முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவருகின்றனர். முஸ்லிம் அல்லாதவர்கள் வக்புக்கு சொத்துகளை தானம் செய்யக்கூடாது என்றும், முஸ்லிமாக இருந்தாலும் அவர் 5 ஆண்டுகளாவது இஸ்லாத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தேவையற்ற நிபந்தனைகளை கொண்டுவருகின்றனர். வக்பு வாரியத்தில் இருக்கும் சொத்துகளை கொள்ளையடிக்க வேண்டும், இதற்கு மேல் வக்புக்கு சொத்து சேர்ந்துவிடக்கூடாது என்ற தீய நோக்கத்துடன் இந்த சட்டதிருத்தத்தை கொண்டுவருகின்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு போதிய அவகாசம் கொடுக்காமல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சொன்ன எந்த திருத்தத்தையும் சேர்க்காமல் ஆளுங்கட்சி சொன்ன திருத்தங்களை மட்டும் சேர்த்துள்ளனர். இந்த திருத்தங்களுக்கு சட்டவடிவம் கொண்டுவந்தால் ஜனநாயக வடிவில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.