தாரமங்கலம் மாமனார் வீட்டில் நின்ற 4 டூ வீலர்களுக்கு தீவைப்பு
சேலம் மாவட்டம் தாரமங்கலம் 3-வது வார்டு சின்னேரிகோடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சேட்டு மகள் பிரியா. இவருக்கும், ஸ்ரீரங்கனூர் தேங்காய் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த தறி தொழிலாளி குமார் (35) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தைகளுடன் பிரியா தாய் வீட்டுக்கு வந்து விட்டார். மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இருந்த குமார் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமனார் வீட்டிற்கு வந்தார். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 4 மோட்டார் சைக்கிள்களையும், வீட்டிற்கு வெளியில் இருந்த துணிமணிகளையும் தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். மோட்டார் சைக்கிள்கள் கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிருப்தி அடைந்த பிரியாவின் அண்ணன், தாய் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அலறி கூச்சலிட்டனர். அவர்கள் போராடி தீயை அணைப்பதற்குள் 4 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதமானதுடன் எலும்பு கூடாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.