சேலம் மாவட்டம் சங்ககிரி புள்ளிபாளையம் சண்முகா கல்வி நிறுவனங்களின் பொறியியல், மருந்தியல் மற்றும் செவிலியர் பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. சண்முகா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். துணை தலைவர் பிரபாகர், தலைமை இயக்குனர் திருமூர்த்தி ஆறுமுகம், இணை செயலாளர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். பல்கலைக்கழக துணை வேந்தர் கே. நாராயணசாமி, ஜோஹோ கார்ப்பரேஷன் மனிதவளத்துறை தலைவர் சார்லஸ் காட்வின் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கே. நாராயணசாமி மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் உயர்வதற்கு உதவியாக இருந்த பெற்றோர், நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலாம் ஆண்டு கல்லூரியில் சேரும் போது கல் போன்று இருந்த மாணவ- மாணவிகளை இன்று அழகிய சிற்பமாக மாற்றிய ஸ்ரீசண்முகா கல்வி நிறுவனத்துக்கு மாணவ- மாணவிகள் நன்றிக்கடன் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார். கல்லூரி முதல்வர் ரா. பழனிசாமி வரவேற்றார். விழாவில் பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.