சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்
கார்த்திகை மாதம் தொடங்கியதும் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலை சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை சீசன் விரைவில் தொடங்குவதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல வசதியாக தெற்கு ரயில்வே சார்பில் சேலம் வழியாக கர்நாடக மாநிலம் ஜூப்பிலியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெங்களூரு, சேலம், திருப்பூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக செல்கிறது. அதன்படி இந்த சிறப்பு ரயில் வருகிற 19ஆம் தேதி முதல் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஜூப்பிலியில் மாலை 3:15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு நள்ளிரவு 3.05 மணிக்கு வந்து சேரும். தொடர்ந்து திருப்பூர் வழியாக கோட்டயத்திற்கு மதியம் 12 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் ஜனவரி 14-ஆம் தேதி வரை இயக்கப்படும். இதே போல் மறுமுனையில் வருகிற 20-ம் தேதி முதல் கோட்டயத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து மறுநாள் மதியம் 12:50 மணிக்கு ஜூப்பிலி சென்றடையும். இந்த ரயில் சேவை ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.