சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கொசு மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் அந்த பெண் வைத்திருந்த கொசுமருந்து பாட்டிலை பறித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண் கூறும் போது, எனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. முன் விரோதம் காரணமாக சங்ககிரியை சேர்ந்த சிலர் எனது திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்து, எனது தாயார் மீது போலீசில் பொய் புகார் கூறுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என்று கூறினார். இதையடுத்து அந்த பெண்ணிடம் சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதால், கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.