

சேலம்-கொச்சின்: தினசரி விமான சேவை இயக்க முடிவு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திற்கு சென்னை-சேலம்-சென்னை என இரு மார்க்கங்களிலும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் அலைன் ஏர் விமான நிறுவனம் மூலம் வாரத்தில் 5 நாட்கள் கொச்சின்-சேலம்-பெங்களூரு சென்று மீண்டும் அதே மார்க்கத்தில் கொச்சினுக்கு பயணிகள் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகிற 30-ஆம் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் கொச்சின்-சேலம்-பெங்களூரு, அதேபோல் பெங்களூரு-சேலம்-கொச்சின் ஆகிய இரு மார்க்கங்களிலும் விமான சேவை இயக்கப்படும். 30-ஆம் தேதி முதல் மதியம் 12.10 மணிக்கு கொச்சினில் புறப்படும் விமானம் 1.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 1.45 மணிக்கு புறப்பட்டு 2.45 மணிக்கு பெங்களூருவை அடையும். அதேபோல் பெங்களூருவில் மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு 4.20 மணிக்கு சேலம் வரும். இங்கிருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு 5.50 மணிக்கு கொச்சினை அடையும் என விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.