சேலம் செட்டிசாவடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 110க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக அந்தோணி தாஸ் என்பவர் கடந்த ஆறு மாதமாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் அந்தோணி தாஸை கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு பணியிட மாற்றுதல் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அந்தோணி தாஸ் வந்த பிறகுதான் பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி கற்பிப்பது உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் இதே தலைமை ஆசிரியர் இந்தப் பள்ளியில் நீடிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
அவ்வாறு மாணவ மாணவிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வேறு பள்ளிக்கு மாற்றி விடுவோம் என பெற்றோர்கள் தெரிவித்தனர். போராட்டம் நடத்தினால் தீர்வு கிடைக்காது என்று கல்வி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.