நாமக்கல்: கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்
சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நான்கு கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கருத்து கேட்புக் கூட்டம், சேந்தமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ச. உமா தலைமை வகித்தார். கல்குவாரிகளால் ஏற்படும் பிரச்னைகள், பொதுமக்களுக்கான பாதிப்புகள், கனிம வளம் அதிக அளவில் சுரண்டப்படுவது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவது குறித்து தன்னார்வலர்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதற்கு, குவாரி உரிமையாளர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். இதற்கிடையே, கூட்டத்தில் பங்கேற்ற கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தன்னார்வலர் அகிலன் என்பவர் பேசுகையில், சிலர் தன்னை மண்டப வளாகத்தில் நுழையவிடாமல் தடுத்து தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார். அப்போது சிலர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். தாக்கியதாக கூறப்படும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் அகிலனிடம், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கல்குவாரிகளை தொடர்ந்து இயக்குவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும், அங்கிருந்து உத்தரவு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.