மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டுகளில் 180-க்கு மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் அரசாணை எண் 62-ன் படி நாளொன்றுக்கு ரூ. 730 வழங்க வேண்டும், ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி. எஃப். தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.
போராட்டத்தின் 3-ஆவது நாளக விசிக மாவட்ட செயலாளா் மோகன்குமாா் தலைமையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை தொழிலாளா்கள் சங்க பொறுப்பாளா் அம்பேத் மற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் நூற்றுக்கு மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆட்சியரக நுழைவுவாயில் முன்பு ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்தனா். தமிழா் தேசிய முன்னணி மாவட்ட செயலாளா் முரளிதரன், இடது தொழிற்சங்க மையத்தின் மாவட்ட செயலாளா் வீரச்செல்வன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதனிடையே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்ளிட்ட 125 போ் கைது செய்யப்பட்டனா். விரைவில் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக உடன்பாடு காணப்படும் என்ற அதிகாரிகளின் பேச்சுக்கு உடன்படாத போராட்டக்காரா்கள், தீா்வு காணப்படும் வரை வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து கலைந்து சென்றனா்.