விழுப்புரம்-தஞ்சாவூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மயிலாடுதுறை எம்.பி. ஆர். சுதா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது: விழுப்புரம்-தஞ்சாவூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ரயில்வே துறை மூலம் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினேன். ரயில் பாதை அமைத்திட நிலம் கையகப்படுத்துதல், தற்போதைய ரயில் நிலையங்களில் கூடுதல் ரயில் மேடைகள் உள்ளிட்ட வசதிகள் செய்தல், அடுத்து வரும் 10 ஆண்டுகளில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் அளித்துள்ளனர்.
ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தவுடன் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.