மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி இளைஞர்கள் இருவர் சாராய வியாபாரிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். முன்னதாக, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சோதனைச் சாவடிகளைக் கடந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு நடத்திய திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கே. ஜோஷி நிர்மல்குமார், மயிலாடுதுறை உட்கோட்டத்தில் இயங்கி வரும் நல்லாடை சோதனைச் சாவடி மற்றும் சீர்காழி உட்கோட்டத்தில் இயங்கி வரும் நண்டலார் சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, சோதனைச் சாவடியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை தணிக்கை செய்தும், காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானங்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு பேருந்து மற்றும் தனியார் வாகனங்களை தணிக்கை செய்யும் வழிமுறைகள் குறித்தும், மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்தல் மற்றும் அவர்களின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும், வாகனத் தணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களிடம் அணுகும் முறை ஆகிவை குறித்து பணியிலிருந்த காவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.