திருப்பரங்குன்றம்: அரோகரா கோஷத்துடன் வேல் வாங்கும் விழா
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கம்பத்தடி மண்டபத்தில் கோயில் பணியாளர்கள் திருக்கண்ணில் நேற்று (நவ. 6) மாலை சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு பூஜைகள் நடைபெற்றன. கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு நந்தியை வலம் சென்று கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சுவாமியின் கரத்தில் சேர்க்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் முருகப்பெருமானை வழிபட்டனர்.