அருமனை அருகே கிளாத்தூர் என்ற பகுதியில் கோழி தீவனம் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதை கிரண் (40) மற்றும் தீரஜ் ரோஸ் (48) ஆகியோர் நடத்தினர். இந்த நிறுவனத்திற்கு அலெக்ஸ் என்பவர் நிலத்தை குத்தகைக்கு கொடுத்தார். நிறுவனத்திற்கு வங்கி கடன் ரூ. 39 லட்சம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜி ராஜ் என்பவரிடமிருந்து ரூ. 29 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். அந்த பணத்தைக் கொண்டும் மேலும் பல எந்திரங்கள் வாங்கினார்.
இருப்பினும் நிறுவனம் சரியாக ஓடாததால் வங்கி சீல் வைத்தது. இந்த நிலையில் கேரளாவிலிருந்து கடன் கொடுத்த ஷாஜி ராஜ் அருமனைக்கு வந்து நில உரிமையாளர் அலெக்ஸை சந்தித்து பேசி, நேற்று (பிப்ரவரி 05) நள்ளிரவு நிறுவனத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை 3 லாரிகளில் திருடினர்.
இன்று (பிப்ரவரி 06) காலை லாரி புறப்பட்டபோது நிறுவன உரிமையாளரின் மனைவி எதிர்பாராதவிதமாக பார்த்துள்ளார். உடனடியாக அருமனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடனே உஷாராகி கேரளா எல்லை சோதனை சாவடிகளுக்கு தகவல் கொடுத்து, பல கிலோமீட்டர் தூரத்தில் கேரளா சென்ற இரண்டு லாரிகளையும் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நில உரிமையாளர் அலெக்ஸ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.