ஈரோடு: ஜவுளி வாங்க படையெடுக்கும் பொது மக்கள்
தீவாளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கு பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஜவுளிக்கடையில் கடந்த ஒரு வாரமாக விற்பனை களைகட்டி உள்ளது. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளதால் ஜவுளி வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜவுளி வாங்க பொதுமக்கள் படை எடுப்பதால் கடந்த சில நாட்களாக ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தாலும் வழக்கத்தை விட வாகன எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர். ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஈரோடு ஆர் கே வி ரோடு நேதாஜி ரோடு காந்திஜி ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதுபோல் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையத்துக்கு செல்வதற்கு பன்னீர்செல்வம் பூங்கா வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் என்பதால் சூரம்பட்டி நால்ரோடு வழியாக வாகன ஓட்டிகள் அதிகமாக சென்று வருகின்றனர்.