ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூளை, பாரதிநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் கடந்த சில நாட்களாக ரசாயன கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை வாகனங்களில் வந்து சிலர் கொட்டி விட்டு செல்கின்றனர். இரவு நேரத்தில் வரும் வாகனங்களில் வருபவர்கள் கழிவுகளை கொட்டி விட்டு செல்வதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கழிவுகள் தேங்கி கிடப்பதால் நோய் பரப்பும் ஆபாயமும், நிலத்தடி நீர் மாசுபடும் ஆபாயமும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இது குறித்து கலெக்டர் அலுவலகத்திலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடமும் இப்பகுதி மக்கள் ஏற்கனவே மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் ரசாயன கழிவுகளை ஏற்றி வந்த லாரி பாரதி நகர் பகுதியில் கழிவுகளை கொட்ட வந்துள்ளது. கழிவுகளை கொண்டு வந்த லாரி அங்குள்ள சேற்றில் சிக்கி நகர முடியாமல் இருந்துள்ளது. லாரியின் டிரைவர் எவ்வளவோ முயன்றும் லாரியை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் அந்த வழியாக சென்றபோது லாரி ஒன்று சேற்றில் சிக்கியிருப்பதை பார்த்து லாரி அருகே சென்று பார்த்தபோது லாரிக்குள் கழிவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.