பவானிசாகரில் குவிந்த பொதுமக்கள் தொடர் விடுமுறை காரணமாக பவானிசாகர் அணைப்பூங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். போகிப்பண்டிகை நாளில் வீடுகளில் பூலப்பூ, வேப்பந்தலை, ஆவாரம்பூ என முன், பின் பகுதிகளில் வைத்து இரவு சங்கராந்திக்கு தலைவாழை இலையில் உணவு வகைகளை வைத்து வழிபடுகின்றனர்.
14-ஆம் தேதி பொங்கல், நேற்று 15-ஆம் தேதி மாட்டுப்பொங்கல், மற்றும் திருவள்ளுவர் தினம், இன்று (16.1.25) காணும் பொங்கல் என தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று முன்தினம் பொங்கல் தினம். அன்று பெரும்பாலானோர் பண்ணாரி கோயிலுக்கு சென்று பண்ணாரி மாரியம்மனை தரிசனம் செய்தனர். பின்னர், பவானிசாகர் அணைப்பூங்காவுக்கு வந்தனர். பலர் குடும்பத்தினருடன் புல்தரையில் அமர்ந்து உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர். பலர் தங்களது குழந்தைகளுடன் படகு தூரி, ஜம்பிங் கேம் என ஆடினர். சிறுவர்கள் ரயில், சிறுவர் படகிலும் பயணித்து மகிழ்ந்தனர். அங்கு உள்ள நீர்நிலைகளில் சிறுவர், சிறுமியர் மட்டுமின்றி பெரியவர்களும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து காணும் பொங்கல் தினமான இன்றும் பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.