ஆத்தூர்: அனுமந்தராயன்கோட்டை தடுப்பணை புதுப்பொலிவு
திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டை தடுப்பணையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அப்போது தடுப்பணைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குற்றால அருவி போல் கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்வார்கள். இந்த நிலையில் தடுப்பணையில் தண்ணீர் கொட்டும் இடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி தனது சொந்த செலவில் தடுப்பணையை சீரமைத்து சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார். அதன்படி ரூ. 20 லட்சத்தில் தடுப்பணையில் சீரமைப்பு பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தடுப்பணையில் தண்ணீர் கொட்டும் இடங்களில் உள்ள சிறிய அளவிலான பாறைகளில் சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வர்ணங்கள் பூசப்பட்டன. அதோடு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதற்காக கைப்பிடி தடுப்புகளும் அமைக்கப்பட்டன. இதையடுத்து தடுப்பணை புதுப்பொலிவு பெற்றது. புதுப்பொலிவுடன் தடுப்பணை காட்சியளிப்பது குறித்தும், அதில் தண்ணீர் நிரம்பி வழிவது குறித்தும் அறிந்த சுற்றுலா பயணிகள் நேற்று காலையில் இருந்தே தடுப்பணைக்கு வந்து உற்சாக குளியல் போட தொடங்கினர். சிலர் தங்கள் குடும்பத்தினருடன் தண்ணீர் கொட்டும் இடத்திற்கு சென்று அங்குள்ள பாறைகள் மீது அமர்ந்து ஆனந்த குளியல் போட்டனர்.