கோவை: வீட்டு முன்பு விளையாடிய சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளகிணறு பெருமாள் சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). தனியார் நிறுவன ஊழியர். இவரது 10 வயது மகன் அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும் சிறுவன் வீட்டு முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஹரிஷ் என்பவரின் வீட்டு வளர்ப்பு நாய் (ஜெர்மன் ஷெப்பர்ட்) மாணவனை கடித்தது. இதில் மாணவனின் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சதீஷ்குமார் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், நாய் உரிமையாளர் ஹரிஷ் (40) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.