சென்னை: எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மறைவு - முதல்வர் இரங்கல்
பிரபல எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா செளந்தராஜன் மதுரையில் காலமானார். அவருக்கு வயது 65. அவரது மறைவுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை டிவிஎஸ் நகர், சத்யசாய் நகர் 4-வது குறுக்குத்தெரு பகுதியில் வசித்தவர் பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தராஜன். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று(நவம்பர் 10) காலை வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்திரா செளந்தர்ராஜனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சௌந்தர்ராஜன் நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர். வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர். வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.