சென்னை: தீவுத்திடலில் பட்டாசு கடைகள்; சுற்றுலாத்துறை செயலர் ஆஜராக ஆணை
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பட்டாசு விற்பனை மூலமாக தனிநபர்களுக்கு செல்லும் வருமானம் அரசுக்கு கிடைக்க வேண்டும் என்ற நல்லஎண்ணத்தில்தான் தானும் பேசுவதாக தெரிவித்தார். மேலும், அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத்துறை செயலர், சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.