சென்னை: ரூ. 3.50 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு; அரசு
சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத 3 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்களில் அதை உருவாக்குவதற்கான பணிகளில் குடிநீர் வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 2002-ம் ஆண்டு முதல் பழைய கட்டிடங்கள், புதிய கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. அத்துடன், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தினால் மட்டும் போதாது அதை ஆண்டுதோறும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம், சென்னை மாநகராட்சி சார்பில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், தண்ணீர் தட்டுப்பாடு வராது, தண்ணீரின் உப்புத் தன்மை குறையும், வெள்ளபெருக்கும் கட்டுப்படுத்தப்படும் என்ற தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வீடுதோறும் வழங்கப்பட்டன. இதுபோல ஆண்டுதோறும் வெவ்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பைப் பராமரிக்க, அதில் உள்ள கூழாங்கல், கருங்கற்களை சுத்தம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால், மொட்டை மாடியில் இருந்து வரும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள் மணலுடன் சேர்ந்து கட்டியாகிவிடும். அதனால் மழைநீர் நிலத்திற்குள் செல்லாமல், தெருக்களில் வழிந்தோடிவிடும் என மக்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது.