கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் தமிழக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11ம் தேதி இரவு 8. 30 மணி அளவில் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் பிரதான பாதைக்கு பதிலாக லூப் லைன் எனப்படும், கிளை பாதையில் மாறி, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டன. 19 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் தமிழக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது, விபத்து நடைபெற்ற இடத்தில் அதாவது பிரதான பாதையில் இருந்து கிளை பாதைக்கு (லூப் லைன்) மாற்றக்கூடிய பாய்ன்ட்டில் போல்ட்டுகள், நட்டுகள் கழற்றப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் மாற்றி உள்ளோம். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே சட்டத்தில் 150வது சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினர்.