கவரைப்பேட்டை ரயில் விபத்து: விசாரிக்க தனிப்படை அமைப்பு

67பார்த்தது
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தமிழக ரயில்வே காவல்துறை சார்பில், 3 டிஎஸ்பி-கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என். ஐ. ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். விபத்து நடந்த இடத்தில் இருந்த ‘ஸ்விச் பாய்ன்ட்’ போல்ட்கள் கழற்றப்பட்டு இருந்தன. இது வழக்கத்துக்கு மாறாக இருந்தை கண்டுபிடித்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். இதுபோல, ரயில்வே போலீஸாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பாக விசாரிக்க தமிழக ரயில்வே காவல் டிஎஸ்பிகள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மேற்பார்வையில், சென்ட்ரல் ரயில்வே காவல் டிஎஸ்பி கர்ணன், எழும்பூர் ரயில்வே காவல் டிஎஸ்பி ரமேஷ், சேலம் ரயில்வே காவல் டிஎஸ்பி பெரியசாமி ஆகிய தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படை குழுவிலும் 8 பேர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி