சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை
லாட்டரி அதிபர் மார்ட்டின் அவருடைய உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, கோவையில் பல்வேறு இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது. கடந்த மாதம்தான் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி லீமாரோஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஆலந்தூர் நீதிமன்றம் முடித்து வைத்தது தவறானது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணை அமைப்புகள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று (நவம்பர் 14) காலை தொடங்கி சென்னை போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டின் வீடு, தியாகராய நகரில் உள்ள அலுவலகம், அவரது மகன் சார்லஸின் இல்லம், அவருக்குச் சொந்தமான நிறுவனம், மருமகனும் விசிக துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வீடு, கோவை துடியலூரில் உள்ள லாட்டரி மார்ட்டினின் வீடு, அருகிலேயே உள்ள அவரது அலுவலகம், அவருக்குச் சொந்தமான 'மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை' எனப் பல்வேறு இடங்களிலும் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.