ஆவடி: ரயிலில் பயணியிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
ஆவடியை சேர்ந்தவர் ஸ்மித்தா. இவர் தனது மகளை கோயம்புத்தூர் ரயில் ஏற்றிவிட ஆவடியில் இருந்து மின்சார ரயிலில் சென்ட்ரல் நோக்கி சென்றார். அண்ணனூர் ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு மின்சார ரயில் மெதுவாக புறப்பட்ட போது நடைமேடையில் நின்ற மர்ம நபர் திடீரென ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த ஸ்மித்தா கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் பயணியிடம் நகை பறித்த பட்டாபிராம் காந்திநகரை சேர்ந்த நாகராஜ் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி குற்றவியல் நடுவர்-2 நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதில் குற்றவாளி நாகராஜிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்டஈடும் 3 மாதத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.