வேலூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 4,308 பேர் விண்ணப்பம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த மாதம் 29-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 26 ஆயிரத்து 288 ஆண்கள், 6 லட்சத்து 70 ஆயிரத்து 813 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 172 பேர் என்று மொத்தம் 12 லட்சத்து 97 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் குறித்த சிறப்பு முகாம் 4 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் கடந்த 16, 17-ந் தேதிகளில் நடந்தது. 16-ந் தேதி நடந்த முகாமில் 4, 331 பேரும், 17-ந் தேதி நடந்த முகாமில் 7, 243 பேரும் என மொத்தம் 11, 574 பேர் விண்ணப்பங்கள் அளித்தனர். இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடந்தது. வாக்காளர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பங்களை அளித்தனர். பெயர் சேர்தலுக்கு 2, 449 பேரும், நீக்கம் செய்ய 396 பேரும், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு 1, 463 பேரும் என மொத்தம் 4, 308 பேர் விண்ணப்பங்கள் அளித்தனர். இந்த முகாம் இன்றும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.