வேலூரை சேர்ந்தவர் சமூக செயற்பாட்டாளர் அன்பரசன். அனிமேசன் வேலை செய்து வரும் இவர் வேலூரில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தினமும் உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் வசிக்கும் வீடற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு புத்தாடைகளை வழங்கியுள்ளார்.
அப்போது அவர்களின் பிள்ளைகளுக்கும் புத்தாடை கொடுக்க நினைத்தவர் "ஆனால் அது பிள்ளைகளுக்கு அளவில்லா மகிழ்ச்சியை" கொடுக்க வேண்டும் என எண்ணி. தனது சொந்த செலவில் 17 சிறுவர்களை வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பெரிய துணி கடைக்கு நேரடியாக அழைத்து சென்று அவர்கள் விரும்பும், தேர்வு செய்யும் புத்தாடைகளையே வாங்கி கொடுத்துள்ளார். இந்த புதுவித அனுபவத்தை சற்றும் எதிர்பார்காத சிறுவர்கள் மகிழ்ச்சியில் திகைத்து துணிக்கடையில் சிறகடித்த காட்சி காண்போரையும் மகிழச்செய்தது.
இது குறித்து சமூக செயற்பாட்டாளர் அன்பரசன் கூறுகையில், நமது வீட்டு பிள்ளைகளை நாம் நேரடியாக கடைக்கு அழைத்துச் சென்று அவர்களின் விருப்பப்படியே துணிகளை எடுத்துக் கொடுக்கிறோம் அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதே அனுபவத்தை சாலையோரம் வசிக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என நினைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக இதனை செய்து வருவதாகவும், இதனால் எனக்கு மனதில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.